ஜனநாயக ரீதியாக தன்னை எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறார் முதலமைச்சர் கருணாநிதி என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து இவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி சர்வாதிகார ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் ஆணையில் இயங்கும் காவல்துறை, இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அடக்குமுறையை ஏவி வருகிறது.
பேச்சுரிமை, கருத்துரிமை மறுக்கப்படுகிறது. ஜனநாயக உரிமைகளான ஆர்ப்பாட்டம், கருப்பு கொடி காட்டுதல் இவற்றுக்கெல்லாம் காவல்துறை அனுமதி மறுப்பதுடன் அந்த உரிமையை நிலைநாட்ட முனைவோரின் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்போட்டு கைதுசெய்து சிறையில் அடைக்கும் அக்கிரமத்தை சர்வசாதாரணமாக செய்து வருகிறது.
ஜனநாயக ரீதியாக தன்னை எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறார் முதலமைச்சர் கருணாநிதி. கடந்த 2 ஆண்டுகளாக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டு அடக்குமுறையை ஏவியதற்கு பல சம்பவங்களை சொல்ல முடியும்.
அடிப்படை ஜீவாதார உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதை உணர்ந்து ஜனநாயக உரிமையில் அக்கறை உள்ள அனைவரும் அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை எதிர்த்து மக்கள் சக்தியை திரட்ட வேண்டியது இன்றைய உடனடி தேவையாகும். டாக்டர் சேதுராமன் மற்றும் அவரது தொண்டர்களை கைது செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.