விழுப்புரத்தில் நாளை அரவாணிகள் பேரணி!
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (12:10 IST)
கூவாகம் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் நாளை அரவாணிகள் பங்கேற்கும் எழுச்சிப் பேரணி நடக்கிறது.
தாய் திட்டம், தாய் விழுதுகள் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்பேரணியை முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் தலைமை தாங்கித் துவக்கி வைக்கிறார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பு நாளை மாலை 4 மணிக்குத் துவங்கும் இப்பேரணியில் விழுப்புரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணா மூர்த்தி, வி.எச்.எஸ்.செயலர் மருத்துவர் முரளி, தாய் திட்ட இயக்குநர் லட்சுமி பாய் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இருந்து அரவாணிகள் பங்கேற்கின்றனர்.
ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், கோலாட்டம், பறையாட்டம், மாறுவேடம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் இப்பேரணியின் துவக்கத்தில் நடக்கின்றன.