தலைமைச் செயலகம் முன்பு மறியல் செய்த இந்திய கம்யூ. எம்.எல்.ஏ.க்கள் கைது!
வியாழன், 17 ஏப்ரல் 2008 (15:20 IST)
விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை தலைமைச் செயலகம் முன்பு இன்று சாலை மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அதை கண்டிக்கும் வகையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் சிவ புண்ணியம், குணசேகர், உலகநாதன், ராமசாமி, ராஜசேகரன், பத்மாவதி ஆகியோர் தலைமை செயலகம் எதிரே நடுசாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரியும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக சட்டப் பேரவை வளாகத்தில் நின்று மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் சிறிது நேரம் கோஷம் எழுப்பி விட்டு பிறகு சபை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.