கடலூரில் மாவட்டத்தில் பயிர் சேதங்களை மத்திய குழு பார்த்தது!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (10:54 IST)
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் நெற்பயிர்கள் கடுமையாக தேசம் அடைந்தது. இவற்றை பார்வையிட மத்திய நிபுணர் குழுவினர் நேற்று கடலூர் வந்தனர். அவர்களிடம் சேதம் அடைந்த பயிர்களை விவசாயிகள் காண்பித்தனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பெய்த கனமழையால், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய பயிர்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இவற்றின் சேத விவரங்கள் பற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு விரிவான அறிக்கை அனுப்பி வைத்தது.
இதைத்தொடர்ந்து வெள்ளசேதங்களை மதிப்பிட மத்திய அரசின் உள்துறை இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையில் மத்திய செலவினத்துறை துணை இயக்குனர் தீனாநாத், வேளாண்மைத்துறை புகையிலை வளர்ச்சி இயக்கக இயக்குனர் கே.மனோகரன், மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்து உள்ளது.
இந்த நிபுணர் குழுவினர் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். அவர்களுடன் தமிழக வருவாய் நிர்வாக சிறப்பு ஆணையர் சக்தி காந்ததாசும் உடன் சென்றார்.
முதலாவதாக மத்திய நிபுணர் குழுவினர் சிதம்பரம் சென்றனர். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக கருத்தரங்கு கூடத்துக்கு வந்தனர். அங்கு மழையால் சேதம் அடைந்த பயிர்கள், சாலைகள் பற்றிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
பின்னர் வயலூர் கிராமத்துக்கு சென்று மழையால் சேதம் அடைந்த பயிர்களை நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர். அதோடு சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்து எவ்வளவு சேதம் என கேட்டறிந்தனர்.
பின்னர் திருப்பணி நத்தம் கிராமத்துக்கு வந்த நிபுணர் குழுவினர், உளுந்து வயலில் இறங்கி பார்வையிட்டனர். இதன்பிறகு கன்னங்குடி கிராமத்தில் மழையால் சேதம் அடைந்த வீடுகளின் புகைப்படங்கள் மற்றும் மழை வெள்ளத்தில் பலியான ஆடு, மாடுகளின் புகைப்படங்களை பார்வையிட்டனர். பின்னர் காரில் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு சென்றனர்.
நாகை மாவட்டத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம், தண்டேஸ்வரநல்லூர், ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், பன்னங்குடி ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.