வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சத்யராஜ் சொல்வாரா? ராமகோபாலன் கேள்வி!
சனி, 5 ஏப்ரல் 2008 (15:17 IST)
'தமிழ் உணர்வு' சத்யராஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா? என்று இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களை எதிர்த்து திரைஉலகத்தினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக பேசிய பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தன்னை நாத்திகன் என்று கூறிக் கொள்ளும் இவர், தமிழ்நாட்டில் முருகன் இருக்கும் போது கேரளத்து ஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முருகன் புகழ்பாடும் சத்யராஜ் எத்தனை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்? முருகன் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரா? கி.வீரமணியிடம் முருகன் புகழ்பாடுவாரா?
மற்ற மதங்களை பற்றி பேச தைரியமற்ற கோழை, இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசுகிறார். நடிகர் சங்கம் இதை கண்டிக்க வேண்டும்.
"தமிழ் உணர்வு' சத்யராஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா?
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீக்கிரம் நிறைவேற அரசை வற்புறுத்துகிறோம். மத மோதலை உருவாக்கும் சத்யராஜை வன்மையாக கண்டிக்கிறோம் என்று ராமகோபாலன் கூறியுள்ளார்.