ம‌த்‌‌திய அரசு ஊ‌ழிய‌ர்க‌ள் ஏப்ரல் 2-ம் வாரம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

வியாழன், 27 மார்ச் 2008 (09:41 IST)
''மத்திய அரசின் 6-வது ஊ‌திய‌க் குழு‌வி‌ன் அறிக்கையால் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் தராவிட்டால் ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்க‌ள்'' என்று ஊழியர்கள் மகாசம்மேளனம் அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், மத்திய அரசின் 6-வது ஊ‌திய‌க் குழு‌வி‌ன் அறிக்கையால், மத்திய அரசு ஊழியர்களின் பல சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மத்திய அரசு பணியில் 9 லட்சத்து 70 ஆயிரம் பணிகளை ஒழித்துவிடும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், மத்திய அரசின் 4-ம் நிலை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், 17 விடுமுறை நாட்களை 3-ஆக குறைத்திருப்பதை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியம் மற்றும் மருத்துவ சலுகைகளை தனியார் வசம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு ஊழியர் சங்கங்களை அரசு அழைத்துப் பே‌சி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவா‌ர்க‌ள். இந்த போராட்டத்தை ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்கலாம் என்று முதற்கட்டமாக திட்டமிட்டு இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எ‌ன்று துரை‌ப்பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்