கர்நாடகத்தின் தடுப்பணைத் திட்டம் விவசாய உற்பத்தியை பாதிக்கும்: தமிழ்நாடு மனு!

செவ்வாய், 25 மார்ச் 2008 (19:55 IST)
காவிரியின் கிளை நதிகளின் மீது தடுப்பணைகளை கட்டியும், மோட்டார் போட்டு நீர் எடுத்து பாசனத்திற்கு பயன்படுத்தும் கர்நாடகத்தின் திட்டங்கள் தமிழகத்தின் விவசாயத்தை பெருமளவிற்கு பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

தடுப்பணைகள் கட்டும் கர்நாடக அரசின் திட்டம் காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கு முரணானது என்றும் தனது மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அளித்த 275 டி.எம்.சி. தண்ணீர் பகிர்வு தங்களுக்கு அநீதி என்றும், 450 டி.எம்.சி. தண்ணீர் வேணடும் என்றும் கர்நாடகம் கூறி வருவது, நடுவர் மன்ற உத்தரவை நடைமுறைபடுத்தாமல் தவிர்ப்பதற்கே என்று அம்மனுவில் தமிழ்நாடு குற்றம்சாற்றியுள்ளது.

காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கிடைக்கும் 750 டி.எம்.சி. தண்ணிரில் தமிழ்நாட்டிற்கு (கர்நாடகம் தனது அணைகளில் இருந்து திறந்து விடவேண்டிய 195 டி.எம்.சி. தண்ணீரையும் சேர்த்து) 405 டி.எம்.சி.யு‌ம், கர்நாடகத்திற்கு 275 டி.எம்.சி.யும் பயனீட்டு ஒதுக்கீடு செய்து காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி இந்த கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்