''மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக காலம் தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் இடிந்துவிட்டதால் இருப்பிடமின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நெற்பயிர்கள் நாசமாகி உள்ளன. பலன் தரும் நேரத்தில் நெல் மட்டும் அல்லாது ஏனைய பயிர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தாங்க முடியாத இழப்பால் விவசாயப் பெருமக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டுத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் விவசாயிகள் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். ஏதோ கண் துடைப்பாக ஹெக்டேருக்கு ரூ.4,000 நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார் கருணாநிதி. இந்தத் தொகை மிகவும் குறைந்த தொகையாகும். குறைந்தது 10,000 ரூபாயாவது நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்பது விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பாகும்.
மழையாலும், வெள்ளத்தாலும் பொதுமக்கள் இன்னலுற்று வரும் இந்த நிலையில், முன்னேற்பாடாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனமாகச் செயல்படும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாதிப்புகளுக்கு ஏற்றபடி விவசாயப் பெருமக்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும், மழையால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக காலம் தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
முற்றிலும் பயிர்கள் அழிந்துவிட்ட நிலையில் விவசாயப் பெருமக்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் அல்லாமல், அவர்கள் தொடர்ந்து பயிர் செய்ய கூட்டுறவு விவசாய வங்கிகள் மூலமாகக் கடனும் வழங்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.