சம்பள உயர்வு சிபாரிசு ஏமாற்றம்: மத்திய அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்!

செவ்வாய், 25 மார்ச் 2008 (09:23 IST)
மத்திய அரசின் 6-வது ஊ‌திய குழு‌வி‌ன் அறிக்கையால் பல சலுகைகள் பறிக்கப்பட்டதாகக் கூறி மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளது.

இது குறித்து ம‌த்‌‌திய அர‌சு ஊ‌ழிய‌ர்க‌ள் சங்கத்தின் பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், மத்திய அரசின் 6-வது ஊ‌திய‌க் குழு‌வி‌‌ன் அ‌றி‌க்கை பற்றி எங்களிடம் ஏராளமான எதிர்பார்ப்பு இருந்தது. அதன் அறிக்கையை பார்க்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.10 ஆயிரம் என்று நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால், இந்த அறிக்கையின்படி ரூ.5,740 மட்டுமே அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தனியார் துறையில் அலுவலக உதவியாளருக்குக் கூட அடிப்படை சம்பளம் ரூ.8 ஆயிரமாக உள்ளது.

எங்களுக்கான பல சலுகைகளையும் பறித்துவிட்டார்கள். விடுமுறை நாட்கள் குறைந்து விட்டன. போனஸ் பணத்தை உற்பத்தி சலுகையுடன் இணைத்து விட்டனர். தொழிற்சாலைகளுக்கு அது சரிதான் என்றாலும், நிர்வாக அலுவலக ஊழியர்களுக்கு போனஸ் கிடைப்பது சாத்தியமில்லாமல் போய்விடும்.

5-வது ஊ‌திய‌க் குழு‌வி‌‌ன் அ‌றி‌க்கைபடி 40 ‌விழு‌க்காடு ஊதிய உயர்வு கிடைத்தது. ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு ஊழியர்களுக்கு செலவிடப்பட்டது. ஆனால், இந்த சம்பள அ‌றி‌க்கை‌யி‌ல் 25 ‌விழு‌க்காடு மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்படுகிறது.

இதை எதிர்த்து எங்கள் சங்கம் போராட முடிவு செய்துள்ளது. 6-வது ஊ‌திய‌க் குழு‌வி‌ன் அ‌றி‌க்கையை எதிர்த்து, தமிழக‌ம் முழுவது‌ம் நாளை (26ஆ‌ம் தேதி) மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது குறித்து டெல்லியில் சங்கத் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள் எ‌ன்று பொது‌ச் செயலாள‌ர் துரை‌ப்பா‌‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்