இருமல் மருந்துகளுக்கு தடை- மருத்துவர்கள் கோரிக்கை!

திங்கள், 24 மார்ச் 2008 (13:59 IST)
சில குறிப்பிட்ட இருமல் மருந்துகளை தடை செய்யவேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய குழந்தைகள் சிறப்பு மருத்துவர்களின் திருச்சி கிளையின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சில குறிப்பிட்ட கலவைகள் கொண்ட இருமல் மருந்துகளை தடை செய்ய வேண்டும் என்று மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்று இதன் தலைவர் சுனில் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் கூறியிருப்பதாவது. இருமல் மருந்துகளில் உடலுக்கு தீங்கு உண்டாக்கும் மருந்துகள் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து, அந்த மருந்துகளை தடை செய்ய நுரையிரல் மருத்துவ நிபுணர்களையும், மருந்துகள் பற்றிய சிறப்பு நிபுணர்களையும் கொண்ட குழுவை அரசு அமைக்க வேண்டும்.
பொதுமக்கள் மருத்துவரின் ஆலோசனை, பரிந்துரையின் பேரில் மட்டுமே இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். சிறு குழந்தைகள் மூச்சு விடும் போதோ அல்லது மூச்சு உள் இழுக்கும் போதோ, தூசி போன்றவை நுரையிரலுக்குள் செல்லும். இது நுரையிரலுக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு சிறிய அளவில் இருமல் வருவது இயற்கையானது.

மருத்துவரிகள் கூறாமல், இருமல் மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பது குழந்தைகளை மயக்க நிலைக்கு கொண்டு போகும் ஆபத்து உள்ளது. அத்துடன் சில இருமல் மருந்துகளில் கலந்துள்ள மருந்து பொருட்களால் குணப்படுத்த முடியாத பக்க விளைவுகளையும் உண்டாக்கும் என செய்திக் குறிப்பில் எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்