தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை அர்த்தமற்ற வார்த்தைகளின் அணிவகுப்பு என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை அர்த்தமற்ற வார்த்தைகளின் அணிவகுப்பு! விளம்பரத் தோரணம், தமிழக மக்கள் ஏமாறப் பிறந்தவர்கள் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட காகிதத் திட்டங்களின் கவர்ச்சி அறிக்கை.
புதிய மின் திட்டங்களை அறிவிக்கும் தமிழக நிதிநிலை அறிக்கையில் மின்சாரப் பற்றாக்குறையை நீக்க அறிவிக்கவில்லை.
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வுக்கு என்ன பரிகாரம் என்பதைக் காணாமல், வார்த்தை விளையாட்டை நிதிநிலை அறிக்கை என்ற பெயரில் நிகழ்த்தியுள்ளது அரசு.
புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்குவோம் என்று பூரித்து புளகாங்கிதம் கொண்ட முதல்வர், அவை என்னவாயின என்று தெரிவிப்பாரா?
காவிரிப் பிரச்னை, பாலாறு, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் இடையூறுகளைக் களைய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது என்று கூறுகிறது நிதிநிலை அறிக்கை.
மத்திய அரசு என்பது தி.மு.க. அமைச்சர்களையும் சேர்த்துதானே? 13 மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டைப் பாராமல் உள்ளனர் என ஒப்புக் கொள்கிறாரா கருணாநிதி?
வெள்ள நிவாரணத்துக்கு நிதி பற்றாக்குறை என்றால், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதை நிறுத்திவிட்டு, அந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
சட்டம் ஒழுங்கைக் காக்கவும், தொடர் குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும் என்ன செய்யப் போகிறோம் என்று நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை.
நிதிநிலை அறிக்கையின் பக்கங்கள்தான் 90! மக்களுக்குக் கிடைக்கப்போகும் பலன் பூஜ்யம்.