கோவையில் மார்ச் 29ல் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு!
வியாழன், 20 மார்ச் 2008 (17:41 IST)
கோவையில் வரும் 29ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு துவங்குகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என்.வரதராஜன் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச கம்யூனிஸ்ட் தலைவர்கள் 35 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 800 பிரநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அகில இந்திய மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் 3 மாநிலங்களில் அரசின் தற்போதைய செயல்பாடுகள் பற்றிய விவாதங்கங்ள நடக்கும்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம், தேசிய நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டம் உள்ளிட்ட தேசிய, மாநில அளவிளான பிரச்சனைகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் இறுதி நாளான ஏப்ரல் 3ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்படும்.
மாநாடு துவங்குவதற்கு முன்பு மார்ச் 28ம் தேதி கட்சியின் மத்திய குழு கூட்டமும், அரசியல் தலைமைக் குழுக் கூட்டமும் நடக்கும்.
நாளை முதல் இரண்டு நாள்களுக்கு சென்னை, திருப்பூர், நாகை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான நல்லுறவு- பிரச்சனைகள், மக்கள் பாதுகாப்புக்கான மாற்றுவழி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒகேனக்கல்: மத்திய அரசு தலையிட வேண்டும்!
ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வரதராஜன், கர்நாடக மாநில பா.ஜ.க. தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி வருவதாக கூறினார்.
மத்திய அரசு தலையிடாததால்தான் கடந்த 17 ஆண்டுகளாகக் காவிரிப் பிரச்சனை தீராமல் நீடிப்பதாகக் குறிப்பிட்ட வரதராஜன், ஒகேனக்கல் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.