தமிழக காவல்துறை நவீனமயமாகிறது!
வியாழன், 20 மார்ச் 2008 (15:39 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழக காவல் துறை மேலும் நவீனமயமாகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 2008-09ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, காவல்துறை நவீனமயமாக்கல் நிதியின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கப்படும். இதற்காக ரூ.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
சாலை விபத்துக்களை முக்கியமாக தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக வேகத்தடை, எச்சரிக்கை பலகை, ஒளி வசதி ஆகியவை செய்து தரப்படும் என்றார்.
சாலை பாதுகாப்பு நிதிக்காக மாநில அரசின் பங்காக வழங்கப்பட்டு வரும் நிதி ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும். இந்த தொகை விபத்து தடுப்பு திட்டங்களை செயல்படுத்த செலவிடப்படும் என்றார்.
மேலும், காவல்துறைக்கு மொத்தமாக 2008-09ம் ஆண்டுக்கு ரூ.2,427 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.