இரயில் தடம் புரண்ட விபத்து எதிரொலி: இரயில்கள் ரத்து!
வியாழன், 20 மார்ச் 2008 (15:04 IST)
மதுரை- கொல்லம் பயணிகள் இரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தையடுத்து பல்வேறு விரைவு, பயணிகள் இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, சில இரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படவேண்டிய திருநெல்வேலி- நாகர்கோவில் பயணிகள் இரயில் ரத்து செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்படவேண்டிய நாகர்கோவில- மும்பை விரைவு இரயில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், வழியாக காலை 7 மணிக்கு திருப்பிவிடப்பட்டது.
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் நோக்கி சென்ற விரைவு இரயில் திருநெல்வேலி- கன்னியாகுமரி இடையே பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. கோவை-நாகர்கோவில் விரைவு இரயில் திருநெல்வேலி- நாகர்கோவில் இடையிலும், நாகர்கோவில்- கோவை செல்லும் விரைவு இரயில் நாகர்கோவில் மணியாச்சி இடையிலும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
சென்னை எழும்பூரிலிருந்து திருவனந்தபுரம் சென்ற அனந்தபுரி விரைவு இரயில் திருநெல்வேலி- திருவனந்தபுரம் இடையிலும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
மும்பை- நாகர்கோவில் விரைவு இரயில் திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
குருவாயூர்-சென்னை கூடல் விரைவு இரயில் நாகர்கோவில்- திருச்சி இடையே பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
நாகர்கோவில்- கோவை பயணிகள் இரயில் நாகர்கோவில்- மதுரை இடையே பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.