பொய்மையை களைவோம்: முதல்வர் மீலாது நபி வாழ்த்து!
வியாழன், 20 மார்ச் 2008 (13:56 IST)
அண்ணல் நபிகள் பெருமான் கடைப்பிடித்த மனித நேயத்தைப் பின்பற்றி அவர்போல் பொய்மை களைவோம்; வாய்மையுடனும், நேர்மையுடனும் வாக்குறுதிகள் காப்போம் என இந்நன்னாளில் உறுதியேற்போமாக என்று முதலமைச்சர் கருணாநிதி 'மிலாது நபி' வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அண்ணல் முகமது நபிகள் பிறந்த பொன்னாளை, ''மிலாது நபி'' என இன்று (21ஆம் தேதி) கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
நபிகள் பெருமானார் கற்பித்த இஸ்லாமிய மார்க்க நெறி முழுவதுமே மனித நேய வாழ்வியல் களஞ்சியமாகத் திகழ்வதை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டு அறிய முடியும். நபிகள் நாயகம் அவர்கள் மக்கா நகரில் திருக்குர் ஆன் திருமறையை ஓதிக் கொண்டும், போதித்துக் கொண்டும் இருந்தபொழுது இதனை ஏற்காத பலர் நபிகள் மீது பெரும் பகை கொண்டு அவருக்குப் பல்வகையிலும் தீங்குகளை இழைத்து வந்தனர்.
அவர்களுள் ஒரு மூதாட்டி நபிகளாரின் மீது தினமும் கல்லை எறிவாள்; மண்ணை வாரி வீசுவாள்; அவர் நடக்கும் வழிகளில் முள்ளைப் போட்டு வைப்பாள். அவ்வேளைகளில் நபிகள் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு புன்முறுவல் தவழப் போய்க் கொண்டிருப்பார்.
ஒரு நாள் அந்த மூதாட்டியின் குரோதச் செயல்கள் நின்று போனதைத் தொடர்ந்து அவளைக் காணவில்லையே என்று பாசமுடன் பல இடங்களிலும் விசாரித்து இறுதியில், யாரும் இல்லாத குடிசைக்குள்ளே அம்மூதாட்டி நோய்வாய்ப்பட்டு அனாதையாகப் படுக்கையில் கிடப்பதைக் கண்டு வேதனைப்பட்டார். நினைவிழந்து கிடந்த அம்மூதாட்டியின் அருகில் அமர்ந்து பாசத்துடன் அவள் தலையை வருடினார். அம்மூதாட்டி கண் விழித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். ''அம்மா கவலைப்படாதே; நீ குணமடையும் வரையிலும் நான் அடிக்கடி வந்து உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருப்பேன்'' என்றார்.
இது கேட்ட அம்மூதாட்டி, ''பெருந்தகையாளரே இப்படிப்பட்ட உங்களுக்கா நான் இதுவரையிலும் துன்பங்களை இழைத்துக் கொண்டிருந்தேன்'' என்று கண்ணீர் சிந்தி அழுதாள். அப்பொழுது அவள் வடித்த கண்ணீர் அவள் நெஞ்சில் குடிகொண்டிருந்த குரோத மனப்பான்மையைக் கரைத்து அழித்து விட்டது.
அதே கண்ணீர் இன்றளவும் மக்கள் இதயங்களில் நபிகளாரின் மனித நேய உணர்வைப் பறைசாற்றிக் கொண்டுள்ளது; நமக்கு இன்னா செய்தாரிடமும் பகைமை பாராட்டாது நாம் இனியவற்றையே செய்திட வேண்டும் என்னும் அறவுரையை அய்யன் வள்ளுவரே போல் நமக்கு அறிவுரையாக வழங்கிக் கொண்டுள்ளது.
இப்படித் தமது வாழ்க்கையையே மக்களுக்கு வழிகாட்டும் நெறியாகக் கொண்டு வாழ்ந்த அண்ணல் நபிகள் பெருமான் கடைப்பிடித்த மனித நேயத்தைப் பின்பற்றி அவர்போல் ஏழை எளியோர், விதவை மகளிர், ஒடுக்கப்பட்டோர் எல்லாம் உயர்ந்திட உழைத்திடுவோம்; பொய்மை களைவோம்; வாய்மையுடனும், நேர்மையுடனும் வாக்குறுதிகள் காப்போம் என இந்நன்னாளில் உறுதியேற்போமாக! என்று முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து செய்தி கூறியுள்ளார்.