உள் ஒதுக்கீடு தலித் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும்: கிருஷ்ணசாமி!
வியாழன், 20 மார்ச் 2008 (12:26 IST)
''தலித் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமலாக்க கூடாது'' என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையிலே இருக்கின்றனர். 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டின் பலன் அந்த மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை.
சமீபத்தில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த உள் இடஒதுக்கீடு சம்பந்தமான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தலித் அமைப்புகளுக்கும், முக்கியமான தலித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
உள் இட ஒதுக்கீடு என்பது பட்டியல் இன மக்களை பிரிக்கும் சதி வேலையாகும். தலித் மக்களிடையே பிரிவினையை உருவாக்க கூடிய உள் இடஒதுக்கீட்டை அமலாக்க முயற்சிகளை மேற்கொள்ள கூடாது. இதை கைவிட வேண்டும். இதை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்த வேண்டும்.
இதே போன்று பிரச்சினை ஆந்திராவில் எழுந்தது. அதன் பிறகு கைவிடப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதற்கு சட்டத்திலும் வழியில்லை.
ஏற்கனவே உள்ள 18 விழுக்காடு இடஒதுக்கீடே அந்த மக்களுக்கு சென்று சேராத போது, இந்த உள் இடஒதுக்கீடு பிரிவினையை ஏற்படுத்தும். 3 லட்சத்திற்கு அதிகமான காலி பின்னடைவு இடங்கள் நிரப்பப்படவில்லை, கல்லூரியில் காலியாக உள்ள 522 பின்னடைவு காலியிடங்கள் இதுவரையில் நிரப்பப்படவில்லை. இதையெல்லாம் நிரப்புவதை விட்டுவிட்டு பிரிவினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து விரைவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம் என்று கிருஷ்ணசாமி கூறினார்.