ஈரோடு அருகே மின்சாரம் தாக்கியதில் அடுத்தடுத்து மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோடு மாவட்டம். பூந்துறை அருகே வாய்க்கால்மேடு கிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (54). இவர் விவசாயி.இவரது மகன் அர்ஜூனன் (36). இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கு யுவனேஸ்வரி 30 என்ற மனைவியும், ஒன்றரை வயதில் கவுசல்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று மாலை தனது கோழிப்பண்ணையில் உள்ள வேலியில் இருந்த மின்சார விளக்கை அர்ஜூணன் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு அர்ஜூணன் துõக்கி வீசப்பட்டு இறந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சாமியாத்தாள் (53), அர்ஜூனன் மயங்கி விழுந்து கிடப்பதாக நினைத்து அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார். சாமியாத்தாள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே அவரும் இறந்தார்.
அடுத்தடுத்து சத்தம் கேட்டதால் அர்ஜூனனின் தந்தை சுப்பிரமணியம் ஓடிவந்தார். மகனும், மனைவியும் இருவரும் இறந்து கிடந்தனர். வேலியில் மின்சாரம் கசிந்திருப்பதை அறியாமல் அவரும் வேலியை பிடித்துள்ளார். மின்சாரம் தாக்கி அவரும் இறந்தார். மூவரும் அடுத்தது இறந்தது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு கோட்டாச்சியர் குமரவேல்பாண்டியன், காங்கேயம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், வட்டாச்சியர் அண்ணாதுரை ஆகியோர் விசாரணை நடத்தினர்.