சென்னையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிப்பதற்கு காங்கிரசில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதே போல காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமரும் சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்காக ராமர்பாலத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். இதன் காரணமாக சேது சமுத்திர திட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜன் கோயிலில் தேவாரம் இசைப்பதற்கு ஏற்பட்ட பிரச்சனையை நேரில் சென்று ஆய்வு செய்ய எனது தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மார்ச் 30ஆம் தேதி சிதம்பரம் சென்று அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை தயாரிக்கும். இந்த அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் வகையில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.