இந்து மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட அமைப்பாளர் பரமானந்தம் வழக்கறிஞர் ராம் மனோகருடன் சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பேசிய அக்கட்சியின் செயலர் தா.பாண்டியன் தீவிரவாதத்தை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு தொண்டர்கள் கும்பலாக செல்ல வேண்டுமென்றும் கத்தி, குறுந்தடிகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய தண்டனை சட்டப்படி தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகும். இதன்மூலம் கட்சி தொண்டர்களை அவர் நேரடியாக தூண்டி விட்டுள்ளார்.
தி.நகரில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் கத்திகளை சேகரிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தா.பாண்டியன் தூண்டு தலின்பேரில் எங்கள் அமைப்பினர் தாக்கப்படலாம் என்று அஞ்சுகிறோம். இதுகுறித்து விசாரணை நடத்தி தா.பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.