ஈரோடு மாவட்டத்தில் 727 தையல் கலைஞர்கள் கைது

வெள்ளி, 14 மார்ச் 2008 (12:36 IST)
ஈரோடு மாவட்டத்தில் ஏழு இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனத்தினர் 727 பேர் கைது செய்யப்பட்டனர்.

தையல் தொழிலாளர்கள் நல வாரியத்தை, வருவாய்த் துறைக்கு மாற்றியதை கைவிட வேண்டும் 60 வயது பூர்த்தியான பதிவு பெற்ற தொழிலாளர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தையல் கடைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., சார்பில் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்டு, சூரம்பட்டி நான்குரோடு தொழிலாளர் நல அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.தையல் கலைஞர்கள் சம்மேளன மாநில செயலாளர் மணி தலைமை வகித்தார். இ‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்ட 236 பேரு‌ம் கைது செய்யப்பட்டனர்.

சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ச‌த்தியமங்கலத்தில் கிளை செயலாளர் விஜயகுமார் தலைமையில் 40 பேர், பெருந்துறையில் மாவட்ட பொருளாளர் குப்புசாமி தலைமையில் 79 பேர் கைது செய்யப்பட்டனர்.

பவானியில் பொது செயலாளர் ஜெகநாதன் தலைமையில் 255 பேர், சென்னிமலையில் தாலுகா கமிட்டி உறுப்பினர் சின்னசாமி தலைமையில் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்துக்குளியில் கட்டுமான தொழிலாளர் சங்க தலைவி சரஸ்வதி தலைமையில் 35 பேர், காங்கேயத்தில் தாலுகா செயலாளர் கணேசன் தலைமையில் 54 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்