இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மாநகராட்சி கட்டடத்துறை மூலம் 103 பள்ளி வகுப்பறைகள் மற்றும் 8 ஆய்வுக் கூடங்கள் ரூபாய் 8.86 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 106 பள்ளி வகுப்பறைகள், 2 ஆய்வுக்கூடங்கள் ரூபாய் 8.89 கோடியில் கட்ட அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து 28 பள்ளி வகுப்பறைகள் ரூபாய் 1.48 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.
உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1996 முதல் 2001 வரை சென்னை மாநகர மேயராக இருந்தபொழுது 1,241 ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளியில் நியமிக்கப்பட்டனர். கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 207 ஆசிரியர்கள் மட்டுமே சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
மீண்டும் 2006-ம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு 22 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 22 பட்டதாரி ஆசிரியர்கள், 23 உருதுமொழி இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மேலும் 25 தமிழ்வழி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கான பணி ஆணையை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தற்போது நியமனம் செய்யப்பட்டவர்களைத் தவிர சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மேலும் கூடுதலாக 50 தமிழ்வழி இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.