''கோவில்கள், பள்ளிகள் அருகில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்தக்கோரி பாரதிய ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும்'' என்று மாநில தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில பா.ஜ.க தலைவர் இல.கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பூரண மதுவிலக்கே பாரதிய ஜனதா கட்சியின் லட்சியம். தமிழகத்தில் மதுவிலக்குக் கொள்கை கடந்த 25 ஆண்டுகளாக பலவிதமாக தள்ளாடியபடியே இருக்கிறது. தேசியக் கொள்கை இல்லாமல் மாநில அளவில் மட்டும் மதுவை கட்டுபடுத்துவது முடியாது என்ற அமைச்சர் டி.ஆர்.பாலுவின் கருத்து ஏற்கதக்கதல்ல.
குஜராத்தில் தொடர்ந்து இன்று வரை மது விலக்கு அமலில் இருப்பதை டி.ஆர்.பாலு மறைத்தது ஏன்? 1967க்கு முந்தைய தமிழகத்துடன் தான் தற்போதைய நிலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டுமேயொழிய இது தொடர்பாக பிற மாநிலங்களுடன் ஒப்பிடுவது பொருந்தத்தக்கது அல்ல.
கோவில், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடைய அமைதியை போக்குகின்ற வண்ணம் மது கடை களை அமைப்பது அதிகமாகி வருவது. எனவே இம்மாதிரியான இடங்களில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவில், பள்ளிக்கு அருகில் மதுக்கடைகள் அமைப்பது அதிகமாகி வருகிறது. எனவே இம்மாதிரியான இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்தி மாவட்டம் தோறும் பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது என்று இல.கணேசன் கூறியுள்ளார்.