சேது கால்வாய் தூர்ந்துவிட்டது: விஞ்ஞானிகள் தகவ‌ல்!

செவ்வாய், 11 மார்ச் 2008 (10:10 IST)
சேது சமுத்திர திட்டத்தில் தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துபோய் விட்டதால், இதுவரை செலவு செய்த பணம் அனைத்தும் வீண் எவிஞ்ஞானிகள், சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரி ஜான் ஜேக்கப், ஓய்வு பெற்ற கடற்படை கேப்டன் எச். பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆர்.எஸ். லால்மோகன் ஆகியோர் தூத்துக்குடியில் கூ‌ட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி‌யி‌ல், சேது சமுத்திர கால்வாய் திட்டம் பொருளாதார ரீதியிலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும், சுற்றுச்சூழல் பாதிப்பிலும் பயன்படாத திட்டம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு பின்னோக்கி சொன்றுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை. சேது சமுத்திர திட்டத்தால் இவ்வளவு லாபம் என கணக்கு காட்ட அரசு தயாரா. அவ்வாறு அறிவியல் ரீதியாக கணக்கு காட்டினால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம்.

சேது சமுத்திர கால்வாய் வழியாக கப்பலை இயக்குவோம் என, இதுவரை எந்த கப்பல் நிறுவனமும் உறுதியளிக்கவில்லை. ஏனென்றால் இந்த வழியாக யாரும் கப்பலை இயக்கப்போவதில்லை. சேது கால்வாய் வழியாக கப்பலை இயக்கினால் நஷ்டம்தான் ஏற்படும்.

கடந்த 30 மாத காலம் சேது சமுத்திர கழகம் அல்லது மத்திய கப்பல் அமைச்சகம் அல்லது தூத்துக்குடி துறைமுக சபை ஆகியவற்றால், இதுவரை அகழ்வு செய்யப்பட்ட உண்மையான அளவு குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதுவரை தோண்டியதாக கூறப்படும் கால்வாய் பகுதியும், பணிகள் நிறுத்தப்பட்ட இந்த சில மாதங்களில் முழுமையாக தூர்ந்து போய்விட்டது.

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து பணிகளை மீண்டும் தொடங்கினாலும், ஆரம்பத்தில் இருந்தே மீண்டும் பணிகளை செய்ய வேண்டும். எனவே, இதுவரை இந்த திட்டத்திற்கு செலவு செய்யப்பட்ட பணம் முழுவதும் வீண். மக்கள் பணம் ரூ. 2,400 கோடியை வீணடிக்கிறார்கள். கால்வாய் தோண்டும் பகுதி புயல், மழை மிகுந்த பகுதியாகும். இலங்கையில் ஒரு பலத்த மழை பெய்தால் கூட போதும், கால்வாய் தூர்ந்து போய்விடும்.

பாதுகாப்பு விஷயத்திலும் இந்தத் திட்டம் ஆபத்தான திட்டம்தான். அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு இந்த வழியாக போர்கப்பல்கள் செல்ல வேண்டியிருந்தால் மிகவும் மெதுவாக தான் செல்ல முடியும். எந்த பயனும் இல்லாத, மக்கள் பணத்தை வீணடிக்கிற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த திட்டத்தை இனிமேல் தொடரக்கூடாது. இத்துடன் அரசு கைவிட வேண்டும் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்