பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநாடு ஏப்ரல் மாதம் சென்னையில் நடக்கிறது என மாநிலத் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
இது குறித்து ஈரோட்டில் தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
பா.மக., நிறுவனர் ராமதாஸ் ஆலோசனைப்படி, தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க கவுரவ தலைவர் மணி, ரேஷன் கடை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கைøö ஏற்று, ஒரு குழு அமைத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் படி விற்பனையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரத்து 25, எடையாளர்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 600 பெற்று தரப்பட்டது. இதன் மூலம் 35 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெற்றனர். 35 ஆயிரம் கூட்டுறவு தொழிலாளர்களையும் நிரந்தரமாக்க கோரினோம்.
ஆனால் கல்வித் தகுதி, வயது ஆகியவற்றை காரணம் காட்டி 10 ஆயிரம் பேருக்கு பணி வரன்முறை தராமல் உள்ளனர். விதிமுறைகளை தளர்த்தி அனைவருக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அரசு இதை ஏற்றுக்கொண்டது. ஆனால், பணி வரன்முறை செய்யப்படாமல் இருந்து வருகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் 40 சதவீதம் மட்டும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் 100 சதவீதம ரேஷன் கார்டுதாரர்களை அழைத்து ஒப்பிட்டு பார்த்து கார்டுதாரர்களை அலைக்கழிக்கிறது. 100 சதவீதம் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆயிரம் பணியாளர்கள் நிரந்தரமாக்க வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மாநாடு நடக்கிறது. சென்னையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடக்கும் மாநாட்டில், தமிழக முதல்வர், பா.ம.க., நிறுவனர் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.