அடுத்த நிதியாண்டில் ரூ.2.75 லட்சம் கோடி விவசாய கடன்: ப.சிதம்பரம்!
திங்கள், 10 மார்ச் 2008 (17:09 IST)
''அடுத்த நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கோடி விவசாய கடன் வழங்கப்படும்'' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர, வட்டார காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியினர் 10 கோடி விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.83 ஆயிரம் கோடி கொடுத்துள்ளனர். நமது அரசு 2004-ம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி பொறுப்பேற்றது.
பொறுப்பேற்றவுடன் நான் 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பயிர்கடனாக இரு மடங்கு தருவேன் என தெரிவித்தேன். 3 ஆண்டு முடிவில் ரூ.2 லட்சம் கோடி பயிர் கடன் கொடுத்துள்ளேன். நடப்பு ஆண்டிற்கு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி வழங்கியுள்ளேன். அடுத்த நிதியாண்டு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கோடி கடனாக கொடுக்க திட்டம் தயாரித்துள்ளேன்.
கல்வி திட்டத்தில் 10 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு 16 ஆயிரம் கோடி கல்வி கடனாக வழங்கப்பட்டுள்ளது. உலகத்தில் 150 நாடுகள் உள்ளன. எந்த நாட்டிலும் இது மாதிரி கல்வி கடனாக வழங்கியதாக சரித்திரம் இல்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.