விழுப்புரம் அருகில் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!
ஞாயிறு, 9 மார்ச் 2008 (14:28 IST)
விழுப்புரம் அருகில் இருவேறு சமூகத்தினர் இடையில் நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர்.
விழுப்புரம், உளுந்தூர்ப் பேட்டை அருகில் உள்ள எறையூர் கிராமத்தில் சகாய அன்னை மாதா கோயில் உள்ளது. இங்கு வழிபாடு நடத்துவதில் இருவேறு சமூகத்தினர் இடையில் நீண்ட காலமாக மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில், கோயிலில் தங்களுக்குத் தனிப்பங்கு ஒதுக்கித் தரும்படி புதுவை மறைமாவட்ட ஆயர் ஆனந்தராயரிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை வலியுறுத்தி கடந்த வியாழனன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி , அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்ற அமைபிபினர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனிடையில் நேற்றிரவு 'மாதா கோயிலிற்குப் பூட்டுப் போடுவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
தகவல் கிடைத்ததும் விழுப்புரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். இவர்கள் இன்று காலை வீடுகளைத் தாக்கிச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்ய முயன்றனர்.
அப்போது, காவல்துறையினரின் மீது ஒரு கும்பல் சாரமாரியாகக் கற்களை வீசித் தாக்கியது. அவர்களின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை.
இதையடுத்த காவல்துறையினர் கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் பலியானார்கள். அவர்களின் பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை. மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்தச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.