''மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கக்கூடாது'' என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 உறுப்பினர்களில் தி.மு.க கூட்டணி சார்பில் 4 பேர் வெற்றி பெறுவது உறுதி. தற்போது தி.மு.க கூட்டணி சார்பில் 5 பேர் போட்டியிடுவதால் 5வது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்யும்.
தி.மு.க, பா.ம.க இடையிலான பிரச்சனையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசினால் சுமூக தீர்வு ஏற்படும். பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களே வர வேண்டும். இத்தகைய முக்கியமான பதவிகளை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கக்கூடாது.
தற்போது பிரதமர் முதல் கேபினட் அமைச்சர்கள் வரை 24 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.