மாநிலங்களவைத் தேர்தல்: தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் போட்டியிடும் – கருணாநிதி அறிவிப்பு!

புதன், 5 மார்ச் 2008 (21:45 IST)
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழக சட்டப் பேரவையிலிருந்து தேர்வு செய்யப்படவுள்ள 6 உறுப்பினர் இடங்களுக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் 5 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அறிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ள நிலையில், அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க. கூட்டணியின் சார்பில் தி.மு.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 1 இடத்திலும் போட்டியிடும் என்று கூறியுள்ளார்.

ஒரு இடம் கேட்டு பா.ம.க. சார்பாக அதன் தலைவர் ஜி.கே. மணி தனக்குக் கடிதம் எழுதியிருந்ததாகவும், ஆனால் அக்கட்சிக்கு இடமளிக்க முடியாத நிலை உள்ளதெனவும் கூறியுள்ள கருணாநிதி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பா.ம.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

“2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், அன்றைய தினத்தில் 30 உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க. இடதுசாரிகளின் ஆதரவுடன் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற தி.மு.க. ஆதரவளித்து, அவர் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி, இன்னமும் அவரது பதவிக்காலம் தொடர்வதால், மீண்டும் இடம்கேட்பது நியாயமல்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன்னை சந்தித்துப் பேசியபோது மாநிலங்களவைத் தேர்தல் பற்றி விவாதிக்கவில்லை என்றும், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ம.க.விற்கு 31 இடங்கள் ஒதுக்கப்பட்டது என்றும், மாநிலங்களை இடமளிப்பதாக எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலிற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 8 ஆம் தேதி துவங்குகிறது. தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்