முதுநிலை மருத்துவப் படிப்பிலும் இட ஒதுக்கீடு: மருத்துவர்கள் கோரிக்கை!
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (19:19 IST)
தேசிய மருத்துவ தேர்வு வாரியம் மூலம் முதுநிலை மருத்துவப் படிப்பிலும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அதன் பொதுச் செயலர் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இளநிலை மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் வரும் கல்வியாண்டு முதல் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முடிவு பாராட்டத்தக்கது. இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுக்குரியவர்.
இதேபோன்று தேசிய மருத்துவ தேர்வு வாரியத்தின் முதுநிலை மருத்துவப் படிப்புகளிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.