காஞ்சிபுரம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த இரண்டு மாணவிகள் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடல்களை கைப்பற்றிய காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலத்தோட்டத்தை சேர்ந்த சுகன்யா (14), யோகலட்சுமி (13) இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வெளியே சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை.
இவர்களது பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடிப்பார்த்தும், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் மாணவிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று காலை வாலத்தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் இருவரும் பிணமாக மிதந்து கிடந்தனர். இதைத் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து மாணவிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவிகள் இருவரும் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா? அல்லது காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.