சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ்.தினகரன் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கிறிஸ்தவ மதப் போதகர் டி.ஜி.எஸ். தினகரன் கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் சிறுநீரக கோளாறு, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூச்சுத் திணறல் அதிகமானதால், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நேற்று காலை 6.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
தினகரனின் உடல் அடையாறு ஜீவரத்தினம் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின், கிரீன்வேஸ் சாலையில் உள்ள 'இயேசு அழைக்கிறார்' ஜெப மையத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை 9 மணி முதல் ராயப்பேட்டையில் உள்ள அரசினர் மருத்துவமனை எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சகோதரரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. நாளை காலை 10 மணிக்கு அதே மைதானத்தில் அடக்க ஆராதனை நடைபெறும். பின்னர் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் நடைபெறுகிறது.