யாரையோ திருப்திபடுத்த விடுதலைப் புலிகள் கைது என்கிறார்கள்: திருமாவளவன்!
புதன், 20 பிப்ரவரி 2008 (16:16 IST)
''யாரையோ திருப்திப்படுத்துவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் தான் விடுதலைப் புலிகள் கைது என்று சொல்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாற்றியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அப்போது திருமாவளவன் பேசுகையில், மத்திய அரசின் தாராளமயம் மற்றும் உலகமயமாக்கல் உள்ளிட்ட கொள்கைகள் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். இந்த விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். விவசாயத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்த உருப்படியான திட்டமும் இல்லை. வட இந்தியாவில் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் விலை தரப்படுகிறது. ஆனால், நெல்லுக்கு உரிய விலை அளிக்கப்படுவதில்லை. இந்த போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட விடுதலைப் புலி அல்ல. யாரையோ திருப்திப்படுத்துவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் தான் விடுதலைப்புலிகள் கைது என்று சொல்கிறார்கள். எல்லா பிரச்சனைகளையும் விட்டுவிட்டு பிரதான எதிர்க்கட்சித் தலைவரே திருமாவளவனை கைது செய்யுங்கள் என்று கேட்கும் நிலை உருவாகி உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.