திருப்பூருடன் இணைய எதிர்ப்பு உண்ணாவிரதம் அறிவிப்பு
புதன், 20 பிப்ரவரி 2008 (12:05 IST)
ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில், மூலனூர், முத்தூர் பகுதியை திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் வரும் 22ம் தேதி உண்ணாவிரதம் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வெள்ளகோவில், மூலனூர், முத்தூர் பகுதிகளை புதிதாக உருவாகும் திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது. என்பதை வலியுறுத்தி காங்கிரஸ், அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க, அ.இ. சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வரும் 22ம் தேதி வெள்ளகோவிலில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி, மாநில அமைப்பு செயலாளர் கந்தசாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் மணி, ம.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் சண்முகம், நகர செயலாளர் பெரியசாமி, தே.மு.தி.க., சார்பில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நந்தகோபால், பா.ஜ.க, சார்பில் மாவட்ட பிரச்சார குழு உறுப்பினர் பெரியசாமி, அ.இ.சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முத்தூர் காங்கிரஸ் வட்டார செயலாளர் பாலுமணி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தி.மு.க. கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் முத்தூர் சாமிநாதன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது, வெள்ளகோவில், மூலனூர், முத்தூர் ஆகிய பகுதிகளை திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்க நீங்கள் ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. திருப்பூருடன் இணைவதால் இப்பகுதிகள் வளர்ச்சி பெறும். தொழில்கள் முன்னேற்றம் அடையும். புதிய, புதிய தொழில்கள் உருவாக அரசு கடன்வழங்கும் வரும் மார்ச் மாத்ததில் இருந்து திருப்பூர் மாவட்டம் உதயமாகிறது.சிலர் அரசியல் ஆதாயம் தேட நம் பகுதிகளை திருப்பூர் மாவட்டத்துடன் இணைப்பதை எதிர்க்கின்றனர்.
இப்பகுதியின் நலன்கருதி முதல்வர் இந்த புதிய மாவட்டத்தை உதயமாக்குகிறார். ஆகவே வெள்ளகோவில், மூலனூர், முத்தூர் பகுதிகள் திருப்பூர் மாவட்டத்துடன் இணைத்து பயன்பெறுவோம் என்றார்.