அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க பேச்சாளர் வெற்றிகொண்டான் கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று அக்கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிகையில், பிரபாகரனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தமிழகம் கொந்தளிக்கும் என்று ஆதரவு சொன்னவர் ஜெயலலிதா, அதற்காக ஜெயலலிதாவை கைது செய்ய வேண்டும் என்று வெற்றிகொண்டான் கூறுவது தவறான கூற்று.
இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாகக் கூட ஒருவர் பேட்டி கொடுக்க முடியுமா? வெற்றி கொண்டான் இப்படிச் சொல்லி இருப்பது அவர் தெரிந்தே சொன்னதா? அல்லது என்ன சொல்கிறோம் என்பது தெரியாமலே கூறப்பட்ட உச்சவரம்பில்லாத உளறலா?
தமிழகம், ஏன், ஒட்டு மொத்த இந்தியாவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இந்திரா காந்தி ஆதரித்தார். எம்ஜிஆர் ஆதரித்தார். அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஆதரித்தார். இவையெல்லாம் எப்போது? ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு.
ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே விடுதலைப் புலிகளை வெறுத்தது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததும் அல்லாமல், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அவ்வாறு வற்புறுத்தி அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றார்.
எதற்கெடுத்தாலும், அன்றைக்கு விடுதலைப் புலிகளை நீங்கள் ஆதரிக்கவில்லையா? என்று ஜெயலலிதாவை பார்த்து கீறல் விழுந்த இசைத்தட்டதாக, கீச்சுக் குரலில் இவர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும், கருணாநிதியாருக்கும், அவருடைய சீடர்களாகிய வெற்றி கொண்டான்களுக்கும் விளங்கமாட்டேன் என்கிறதே, என்ன செய்ய? விளங்காதவர்களுக்கு விளக்கினாலும் விளங்காது; தமிழக மக்கள் இவர்களை மன்னிப்பார்களாக என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.