தனியார் போட்டியால் இ‌ன்னு‌ம் 2 ஆண்டுகளில் 10 காசு செலவில் செல்போனில் பேசலாம்: ராசா!

சனி, 16 பிப்ரவரி 2008 (10:33 IST)
''தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் போட்டி காரணமாக இன்னும் 2 ஆண்டுகளில் 10 காசு செலவில் செல்போனில் பேசலாம்'' என்று மத்திய அமை‌ச்ச‌ர் ராசா கூறினார்.

மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சென்னை ஐ.ஐ.டி. ஆகியவை கூட்டுசேர்ந்து ஐ.ஐ.டி. வளாகத்தில் ரூ.10 கோடி செலவில் தொலைதொடர்பு ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமை‌ச்ச‌ர் ஏ.ராசா முன்னிலையில் மத்திய தொலைதொடர்பு துறை துணை இய‌க்குன‌ர் ஜெனரல் கீர்த்திகுமார், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் எம்.எஸ்.அனந்த், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குரூப் தலைவர் சேதுராமன் ஆகியோர் இதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டன‌ர்.

பி‌ன்ன‌ர் மத்திய அமை‌ச்ச‌ர் ஏ.ராசா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌‌யி‌ல், ரூ.10 கோடி முத‌லீ‌ட்டி‌ல் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பணிகளுக்காக ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி 5 ஆண்டுக‌ள் நடைபெறும். தொலைதொடர்புத்துறையைப் பொருத்தவரையில் குறைந்தபட்ச கட்டணம் என்று நிர்ணயிக்க முடியாது.

தற்போது பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், ஓடாபோன் என்று பல்வேறு தொலைபேசி நிறுவனங்கள் சேவை அளித்து வருகின்றன. புதிதாக 5 தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறோம்.

தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டி காரணமாக இன்னும் 2 ஆண்டுகளில் ஒவ்வொரு தொலைபேசி வட்டங்களுக்குள் 10 காசு செலவிலும், இந்தியா முழுவதும் 20 காசுசெலவிலும் செல்போனில் பேசக்கூடிய நிலை வரக்கூடும். அதுபோல இன்னும் 10 ஆண்டுகளில் கட்டணமே இல்லாமல் இலவசமாக பேசுவதற்கும் வாய்ப்பு உள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ‌ராசா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்