''சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை பாதியில் கிடப்பில் போட்டால், அதற்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெரும் விலையைக் கொடுக்க வேண்டி வரும்'' என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். தி.மு.க. தலைவர் கருணாநிதி யாரை ஆதரித்தாலும், உறுதியாக உண்மையாகவே இருப்பார். எதிர்த்தாலும் அதிலும் உறுதி காட்டுவார்'' என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே தெளிவாகக் கூறியுள்ளாரே. தமிழ்நாடு காங்கிரஸ் பார்வையாளராக நியமனம் பெற்றுள்ள அருண்குமார் என்ற ஆந்திர பார்ப்பனர். அவரது கட்சி ஊழியர் கூட்டத்தில், சென்ற சில நாட்களுக்கு முன் திருச்சியில் பேசும்போது நான் நடிகர் விஜயகாந்தை சந்தித்து அரசியல் பேசினேன்.
அதை இப்போது வெளியிடமாட்டேன் என்று பேசியுள்ளார். அதுமட்டுமல்ல அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையிலும், மரியாதை நிமித்தமாகக்கூட தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதன் தலைவர் முதல்வரை இதுவரை சந்திக்கவும் கூட இல்லை.
அப்படிப் பேசுவது அவரது உரிமை என்றாலும், அத்தகைய கருத்துகள் இப்போதைய நிலையில் தி.மு.க. தொண்டர்களிடையே தி.மு.க. கூட்டணியின் ஆதரவாளர்களிடையே எத்தகைய அரசியல் விளைவுகளை உருவாக்கும் என்பதை யோசித்திருக்க வேண்டாமா? எனவே தேவையற்ற குழப்பத்தை விதைக்காமல் இருப்பதன் மூலமே, மதவாத சக்திகளை வீழ்த்த முடியும். மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன், கவலையுடன் நாம் கூறுகிறோம்.
மேலும், சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை பாதியில் கிடப்பில் போட்டால், அதற்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெரும் விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது நமது கசப்பான கடமையாகும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங்கும் இதுபற்றி இணக்கமாக சிந்திக்க வேண்டும்.
அகில இந்திய தலைமை எடுக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவை இங்குள்ள பல் குழுவினரும் பல வகையில் பேசுவது, காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை ஊட்டாது; பலவீனப்படுத்தவே செய்யும். இன்றேல், மதவாத சக்திகளும், பிற்போக்கு சக்திகளும் இந்தியாவை அசல் இந்துத்துவா நாடாக ஆக்கிவிடும் அபாயம் தவிர்க்க முடியாது என்று கி.வீரமணி கூறியுள்ளார்.