மார்ச் 10ம் தேதி போராட்டம்: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு!
வியாழன், 14 பிப்ரவரி 2008 (14:54 IST)
பால் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10ஆம் தேதி பால் நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் செங்கோட்டுவேல் கூறினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர் இணைய பொதுக்குழு கூட்டம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பால் உற்பத்தியாளர் நலச்சங்க இணைச்செயலாளர் ராமசாமிகவுண்டர் தலைமை வகித்தார். சங்க தலைவர் செங்கோட்டுவேல் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 7,700 பால் கூட்டுறவு சங்கங்களில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர் உறுப்பினர்களாக உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 750 கூட்டுறவு சங்கங்களில் 7,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு தற்போது 18 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் 25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது ஆவின் நிர்வாகம் பசும்பாலுக்கு ரூ.12, எருமைப்பாலுக்கு ரூ. 14ம் வழங்குகிறது. தனியார் பால் வியாபாரிகள் இதைவிட அதிகம் தருவதால், பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் விற்பனை செய்கின்றனர். இதனால், பால் கொள்முதல் குறைந்து விட்டது. எனவே, ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.5 எருமைப்பாலுக்கு ரூ.10 கொள்முதல் விலை உயர்த்தி தர வேண்டும்.
பால் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களது பணி, பணிவரன் முறைப்படுத்தியும், சம்பளம் நிர்ணயம் செய்தும் அரசு ஆணை பிறப்பிக்கவில்லை. இவர்கள் அனைவரும் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர். எவ்வித சலுகைகளுமின்றி 24 ஆயிரம் பணியாளர்களது குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு கறவைத் திறன் இழந்த மாடுகளுக்கும், இறந்துபோன மாடுகளுக்கும், ரூ. பத்து முதல் 15 ஆயிரம் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும். சேலத்தில் சென்ற மாதம் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் 19 கோரிக்கையை நிறைவேற்ற கோரி வரும் 19ம் தேதி பால் நிறுத்தபோராட்டம், பால் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடத்துவதாக இருந்தது.
ஆனால், கோரிக்கை நிறைவேற்றக் கோரி பால்வளத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் அமைச்சரும், துறை அதிகாரிகளும் கோரிக்கை நிறைவேற்ற ஒரு மாத கால அவகாசம் கேட்டுக்கொண்டனர்.
அரசு கேட்டுக்கொண்ட கால அவகாசம் அதிகமென்பதால் விரைவில் எங்களை நேரிடையாக அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் பால் நிறுத்தும் போராட்டமும், பால் கொள்முதல் நிறுத்தப்போராட்டமும் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.