''அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள புதுச்சேரியில் என்.வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு கைவசம் தரிசு நிலங்கள் இருந்தால் அதை தெளிவாக, விரிவாக வெளியிட வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்றனர். குடிமனைப் பட்டா- மக்களின் உயிர் நாடி. எனவே, குடிமனைப் பட்டா வழங்கும் பணியை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.1,000 விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த விலையை அரசு வழங்கவில்லை. இதனால் தனியார் கொள்முதல் அதிகமாகியுள்ளது. தனியார் கொள்முதல் அதிகமானதால் கோதுமைக்கு விலையேற்றம் ஏற்பட்டது போன்ற நிலை தமிழகத்தில் நெல்லுக்கு ஏற்பட்டு விடுமோ? எனக் கருதுகிறோம்.
இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்துகிறோம். அதற்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், முதல்வர் அளித்துள்ள விளக்கம் குறித்து சென்னையில் 14ஆம் தேதி (இன்று) நடைபெறும் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்; அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும் என்று வரதராஜன் கூறினார்.