தமிழகத்தில் வறுமை கோட்டிக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைகிறது!
வியாழன், 14 பிப்ரவரி 2008 (10:08 IST)
''தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை'' என்று திட்ட ஆணையத் துணை தலைவர் மு.நாகநாதன் கூறியுள்ளார்.
இது குறித்து திட்ட ஆணையத் துணை தலைவர் மு.நாகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் 11-வது திட்டக்குழு அறிக்கையின்படி ஏழைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, தற்போது 22 விழுக்காட்டை எட்டியுள்ளது'' என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியிருப்பது முற்றிலும் தவறு. தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுதான் உண்மை. விஜயகாந்த் குறிப்பிடும் 11-வது திட்ட அறிக்கையை நடுவண் அரசோ, மாநில அரசோ இன்று வரை வெளியிடவில்லை.
மாநிலத் திட்டக்குழு தனது அணுகுமுறை அறிக்கையை அரசிடம் வழங்கிய பிறகு அனைத்து மாவட்டங்களிலும் மண்டல வாரியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும், தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை வழங்கினார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் விஜயகாந்துக்கும் இவ்வறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், விஜயகாந்தோ அவரது கட்சியினரோ, மண்டல ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டோ, நேரிலோ, மடல் வழியாகவோ கூட இன்று வரை எந்தக்கருத்தையும் தெரிவிக்கவில்லை. விஜயகாந்த் கூறும் குற்றச்சாட்டு 2001-2006 ம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்த அ.இ.அ.தி.மு.க. அரசுக்குத்தான் பொருந்தும்.
வறுமையைப் பற்றிய புள்ளி விவரங்களை நடுவண் அரசின் திட்டக்குழுதான் வெளியிடுகிறது. அந்தப் புள்ளி விவரங்கள் நுகர்வு செலவின் அடிப்படையில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகின்றன. 2004-05-க்கு பிறகு, 2009-ல் கணக்கெடுப்பை நடத்தி, 2010-11-ல் தான் முழு அறிக்கை வெளிவரும். இப்புள்ளி விவரங்கள் தமிழக முதல்-அமைச்சரின் ஆட்சி பற்றி உறுதியாக சான்று பகரும். குறுகிய அரசியல் காரணங்களுக்காக தகுதியற்ற முறையில் விமர்சனம் செய்வது அவசரமான, ஆத்திரமான அறிக்கைகள் வெளியிடுவது இனிமேலாவது தவிர்க்கப்படுவது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.