சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை நகரில் கடந்த 2 மாதங்களில் 124 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் மோட்டார் சைக்கிள்களில் சென்று வழிபறியில் ஈடுபட்ட 148 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. திருட்டுத்தனமாக வீடியோ, வி.சி.டி.க்கள், வி.சி.டி ரேப்பர்கள், டி.வி.டி எந்திரங்கள் தயாரித்தது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று 205 இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் 135 வாகனங்களின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 70 வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வாகனங்களில் பதிவு எண்கள் போலியாக உள்ளன. இதனால் இவை ஆந்திரா, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு நிறுத்தியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். சாலை விபத்துகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக நடந்துள்ளது. இதனை மேலும், குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
காதலர் தினம் அன்று சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரமாக காற்றை சுவாசிக்கலாம். அதனை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாஞ்சில் குமரன் கூறினார்.