விஜயகாந்தை நம்பி மோசம் போனவர்கள் கண்ணீர் விட்ட கதை தெரியாதா? ஆற்காடு வீராசாமி!
புதன், 13 பிப்ரவரி 2008 (15:12 IST)
''விஜயகாந்தை நம்பி மோசம் போனவர்கள் கருணாநிதியிடம் வந்து கண்ணீர் விட்ட கதையெல்லாம் தெரியாதா என்ன?'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு கொடுக்கப்படுகின்ற காலம் குறைவு என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். தி.மு.க. பதவி பொறுப்புக்கு வந்தபிறகு 96 நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றுள்ளது. இதில் 31 நாட்கள் தான் விஜயகாந்த் பேரவைக்கு வருகை தந்துள்ளார். வந்த நாட்களிலும் கையெழுத்துப் போட்டு விட்டு உடனடியாக சென்ற நாட்களே அதிகம்.
ஆணவமாகவோ, அகம்பாவமாகவோ தான் என்றைக்கும் பேசியதில்லை என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார். 10.2.2008 அன்று கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் "பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் எங்களிடம் தாருங்கள். யாராக இருந்தாலும் அவர்களது சட்டையைப் பிடித்து மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று உலுக்கிக் கேட்பேன். டெல்லியையே கலக்குகிறேன்' என்றெல்லாம் பேசி அந்த பேச்சு ஏடுகளில் வந்துள்ளதே, அது அவரது அடக்கத்தின் வெளிப்பாடான பேச்சு என்கிறாரா?
எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் உயிரோடு இருந்து திமுகவை முழு மூச்சோடு எதிர்த்து போட்டியிட்ட காலத்திலேதான் 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி 40 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றார்.
கருணாநிதியை போன்ற அரசியல் வாதிகள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் ஏமாந்து விட்டதாகவும் விஜயகாந்த் அறிக்கையிலே கூறியிருக்கிறார். இவரை நம்பி மோசம் போனவர்கள் கருணாநிதியிடம் வந்து கண்ணீர் விட்ட கதையெல்லாம் தெரியாதா என்ன? என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.