அ.இ.அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். பின்னர் அ.இ.அ.தி.மு.க.வில் புதிய பிரிவு தொடங்குவதற்கான சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா முன்மொழிய, பொதுக்குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.
இந்த சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து ஜெயலலிதா பேசுகையில், கிராமம், பேரூராட்சி, நகராட்சி வார்டுகள், மாநகராட்சியில் உள்ள வட்டங்கள் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், அவர்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடும் அ.இ.அ.தி.மு.க. இளைஞர் பாசறை உருவாக்கப்படுகிறது.
இந்த பாசறையில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் இடம் பெறுவார்கள். குறைந்தபட்சம் 27 உறுப்பினர்களை கொண்டு இந்த பாசறை அமைக்கப்படும்.
இதே போல குறைந்தபட்சம் 27 உறுப்பினர்களை கொண்ட இளம்பெண்கள் பாசறையும் உருவாக்கப்படுகிறது. இதிலுள்ள பெண்கள் 25 வயதுக்கு மேல் இருந்தால் அவர்கள் அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியிலும், கட்சி அமைப்புகளிலும் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
மேலும் எம்.ஜி.ஆர் இளைஞரணி உறுப்பினர்களில் வயது உச்சவரம்பு 35 என்றும், அதற்கு மேற்பட்டவர்கள் கட்சி நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஜெயலலிதா பேரவை உறுப்பினர்களுக்கு வயது உச்சவரம்பு 40 என்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கட்சி நிர்வாகிகளாகவும், உறுப்பினர் களாகவும் இணைத்துக் கொள்ளப் படுவார்கள் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து இந்த சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா முன்மொழிய, பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி ஒப்புதல் அளித்தனர்.