நதிநீரை இணைக்க கோரி பிரதமருக்கு ஒரு லட்சம் கடிதம்!
புதன், 13 பிப்ரவரி 2008 (13:00 IST)
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்த வேண்டும் என ஈரோட்டில் நடந்த விழாவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஈரோடு விவேகானந்தர் அறசபை சார்பில் நதிகள் தேசிய மயமாக்க கோரி பிரதமருக்கு ஒரு லட்சம் தபால் கார்டு அனுப்பும் நிகழ்ச்சி துவக்க விழா ஈரோட்டில் நடந்தது. இந்த விழாவில் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
இந்திய நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்று 150 ஆண்டுகளுக்கு முன்பே சர்.ஆதர்காட்டன் என்ற ஆங்கிலேயே பொறியாளர் கோரிக்கை விடுத்தார். கரிகால் சோழனை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர் ஆதர்காட்டன். 720 ஆண்டுகளுக்கு முன் காலிங்கராயன் பவானி நொய்யல் வரை அணை கட்டினார். இதனால், ஈரோடு இன்று செல்வசெழிப்பாக உள்ளது.
ஒரிசாவில் ஓடும் மகாநதி வீணாக கடலில் கலக்கிறது. காவிரியுடன், இதை ஒருங்கிணைத்தால் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். ஒவ்வொரு நதியுடனும் இணைப்பை ஏற்படுத்தி தண்ணீரை திருப்பி விட்டாலே போதும், தண்ணீர் பஞ்சம் இருக்காது. மகாநதி, கோதாவரி, பிரம்மபுத்திரா, காவிரி, தாமிரபரணி போன்ற நதிகளை இணைக்க வேண்டும். இதற்கு ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 13 ஆண்டு காலஅவகாசம் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசுக்கு இது பெரிய செலவு கிடையாது. இந்திய வங்கிகளில் உள்ள வாராக்கடனின் மதிப்பே ரூ. 2 லட்சம் கோடி. இவை அனைத்தும் பெரிய தொழில் நிறுவனங்களிடம் தான் உள்ளன. இதை வசூலித்தாலே பாதி வேலையை முடித்து விடலாம். மத்திய அரசு நினைத்தால் செய்யலாம். விரைவில் இதை செய்யாவிடில் தமிழகம் அரைப் பாலைவனமாகி விடும்.
அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவன் ஒரு சொட்டு தண்ணீர் கூட விட மறுக்கிறான். இந்த சிந்தனைக்கு காரணம் அரசியல்வாதிகள். இதுவா இந்திய ஒருமைப்பாடு? முதலில் இந்திய ஒருமைப்பாடு என்ற சிந்தனையை ஏற்படுத்த வேண்டும். பல ஜாதி, மொழி கொண்ட இந்தியா வேற்றுமையில், ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
வேற்றுமையை கொண்டு வரும் அரசியல்வாதிகள் ஒற்றுமையை கொண்ட வர முடியாது. தென்னக நதிகளை இணைத்தால் தமிழகம் உலகின் உணவுக் களஞ்சியமாக மாறும். நமது கையில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசின் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். நாம் கேட்பது கிடைக்கும் தருணம் இது. நமது அரசியல்வாதிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்த வேண்டும் அவர் பேசினார்.