முறைகேடு தடுக்க ரகசிய குறியீட்டுடன் தனி விடைத்தாள்!
புதன், 13 பிப்ரவரி 2008 (10:06 IST)
''செமஸ்டர் தேர்வு விடைத்தாளில் முறைகேடு நடப்பதை தடுக்க ரகசிய குறியீட்டுடன் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி விடைத்தாள்கள் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்'' என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசந்திரன் கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ராமசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாய் புற்றுநோய் செல்களில் நடக்கும் மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக மத்திய அரசு சென்னை பல்கலைக்கழக மரபியல் துறைக்கு ரூ.1 கோடியே 28 லட்சம் வழங்கி உள்ளது. புற்றுநோய் நோய் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கு உதவி கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். மரபியில் துறை பேராசிரியர் ஏ.கே.முனிராஜன் தலைமையில் இதற்கான ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் நியமனத்தில் எவ்விதமான முறைகேடுகளும் நடக்கவில்லை. தேர்வுக்குழுவை மாற்றும் அதிகாரம் துணைவேந்தருக்கு உண்டு. வருகை பதிவில் கையெழுத்து போட்டுவிட்டு வகுப்புக்கு செல்லாமல் இருப்பது உள்ளிட்ட தவறுகள் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் இன்னும் தொடரும்.
விடைத்தாளில் முறைகேடு நடப்பதை தடுத்திடும் வகையில் கடந்த செமஸ்டர் தேர்வில் ரகசிய குறியீட்டு விடைத்தாள் (டிஜிட்டல் கோடிங்) வழங்கும் முறையினை கடந்த செமஸ்டர் தேர்வில் அறிமுகப்படுத்தினோம். இதனால், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முடிக்க சற்று காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. தேர்வு முடிவு இன்று அல்லது நாளை (இன்று) வெளியிடப்பட்டுவிடும்.
விடைத்தாளில் முறைகேடு செய்வதை தடுக்கும் நடவடிக்கை மேலும் கடுமையாக்கப்படும். இதற்காக, ரகசிய குறியீட்டுடன் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி விடைத்தாள்கள் வழங்கும் முறை அடுத்த செமஸ்டர் தேர்வில் அறிமுகப்படுத்தப்படும். பல்கலைக்கழக நிர்வாகத்தில் மின்-ஆளுமை வசதி ஏப்ரல் மாதத்திற்குள் ஏற்படுத்தப்பட்டுவிடும் என்று துணைவேந்தர் ராமசந்திரன் கூறினார்.