புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கபாண்டியன் (35), பாபு (30), இடும்பன் (27) ஆகியோர் காரைக்கால் எல்லையில் விசைப் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, சிறிலங்கக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தங்கபாண்டியன் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இத்தகவல் மீனவர் கிராமங்களில் பரவியதையடுத்து பதற்றம் ஏற்பட்டது. ஜெகதாப் பட்டினம், மணமேல்குடி, கோட்டைப் பட்டினம், மீமிசல் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், அப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கக் கடற்படையின் அத்துமீறலைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அனைவரும் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விசைப் படகு மீனவர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, சிறிலங்கக் கடற்படையினரின் அத்துமீறலைத் தடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை இன்று முதல் (திங்கட்கிழமை) காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக விசைப் படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், சிறிலங்கக் கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் தங்கபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரான செல்லனேந்தலில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மீனவர் தங்கபாண்டியனின் குடும்பத்தாரிடம் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் வழங்கினார்.