"குடி வீட்டுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் கேடு என்று எழுதி வைத்து விட்டு, நன்றாக குடியுங்கள் என்று அரசே ஊக்கப்படுத்துகிறது" என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றி உள்ளார்.
இது குறித்து மேட்டூர் அருகில் உள்ள கொளத்தூரில் நடந்த திருமண விழா ஒன்றில் அவர் பேசுகையில், "குடி வீட்டுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் கேடு என்று எழுதி வைத்து விட்டு, நன்றாக குடியுங்கள் என்று அரசே ஊக்கப்படுத்துகிறது. மது விற்பனையின் மூலம் ஏதாவது இலவசமாக கொடுக்க முடியும் என்றும் அரசு கூறுகிறது.
கூலி வேலைக்குச் சென்று சம்பாதிப்பவனின் பையில் உள்ள நூறு ரூபாயை எடுத்துக் கொள்ளும் அரசு, அதில் 10 ரூபாயை நலத்திட்டம் என்ற பெயரில் கொடுக்கிறது. இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமில்லை என்பதால் நாங்கள் தட்டிக் கேட்கிறோம்.
அரசு தன்னிடம் இருந்த கல்வியை கொள்ளைக்காரர்களிடம் கொடுத்து விட்டு, தனியார் நடத்தி வந்த மதுக்கடைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. கேட்டால் ஏராளமான வருமானம் வரும் என்கிறார்கள். அரசு மதுக் கடைகளில் பொங்கலன்று 70 கோடி ரூபாய்க்கு குடித்திருக்கிறார்கள்.
கல்வி அறிவு வளருவதற்காக காமராஜர் படிக்கச் சொன்னார். அதற்காக கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களை திறந்தார். இப்போது அரசு மதுக் கடைகளை திறந்து குடிக்கச் சொல்கிறது. ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகி வருகிறார்கள்" என்றார்.