இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தரிசு நிலத்தைப் பண்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு அளிக்கின்ற திட்டம் குறித்து ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது கடுமையாக பேரவையில் குறை கூறப்பட்டது. ஆளுநர் உரையில் இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 1 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, தி.மு.க ஆட்சியில் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்குவது பற்றி குறை கூறும் அ.இ.அ.தி.மு.க.வினர் அவர்களது ஐந்தாண்டு கால ஆட்சியில் வழங்கப்பட்ட நிலம் 8,371 ஏக்கர். அதனால் பயனடைந்தோர் 6,439 பேர். தற்போது நடைபெறும் தி.மு.க ஆட்சியில் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ள நிலம் 1,61,000 ஏக்கர் இதனால் பயனடைந்தோர் 1,38,000 பேர்.
இதற்குப் பிறகும் இந்தத் திட்டத்தைப் பற்றி குறை கூற அ.இ.அ.தி.மு.க.வினருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே வீடோ, மனையோ, விவசாயத்துக்குத் தேவைப்படும் நிலமோ, எந்த மாநிலத்துக்கும் இணையாகக் கூட அல்ல, அனைத்தையும் மிஞ்சுகிற அளவுக்குத்தான் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வெற்றி முகட்டை எட்டியிருக்கிறது - இடையில் வீழ்ந்து இன்று எழுந்துள்ள இன்பத் தமிழகம்! என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.