பால் விலையை தமிழக அரசு உயர்த்த வலியுறுத்தல்!
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (14:01 IST)
தமிழக அரசு பசும்பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.5 ம், எருமை மாட்டு பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 10ம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு முதன்மை பால் கூட்டுறவு கழக தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன.
சங்க கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க தலைவர் கே.எ.செங்கோட்டுவேல், தமிழ்நாடு முதன்மை பால் கூட்டுறவு கழக தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கால்நடை தீவனம் உள்ளிட்ட பிற பொருள்களின் விலை உயர்ந்ததையடுத்து பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எங்களது கோரிக்கையை உயர்த்தாவிட்டால் எங்களுக்கு வேறு மாற்று வழியே இல்லை. அதனால் பால் கொள்முதலை நிறுத்த போகிறோம்.
பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பால் கொள்முதலை நிறுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களது பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக மாநிலம் முழுவதும் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
தமிழ்நாடு பால் கூட்டுறவு கழகத்தில் பணிபுரியும் 24, 000 தொழிலாளர்களின் வேலையை முறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், பாலின் தரத்தை பரிசோதனை செய்ய மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஐ.எஸ்.ஐ முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.