''சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி எந்த நோக்கத்தில், எந்த அடிப்படையில் கூறினாரோ, அதே விருப்பத்தின் பேரில்தான் என்னுடைய கருத்தை தெரிவித்தேன் ” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேது சமுத்திர திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். எந்த தளத்தில் என்பது முக்கியமல்ல, திட்டம் தான் முக்கியம் என்று நான் தெரிவித்த கருத்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
கருணாநிதியின் பதில் வெளிவந்த அதே நேரத்தில் முரசொலியில் ராமதாசின் குரல் சமீப காலமாக வேறு யாருடைய குரல் போலவோ மாறி ஒலிக்கிறது என்று கிண்டல் செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் என்று கருணாநிதி கூறியிருப்பது 10 ஆண்டுக்கு முன்பு அல்ல 5 மாதங்களுக்கு முன்புதான் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி எந்த நோக்கத்தில், எந்த அடிப்படையில் கூறினாரோ, அதே விருப்பத்தின் பேரில்தான் என்னுடைய கருத்தை தெரிவித்தேன். அதுவும் தோழமை கட்சிகள் கூடி முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தேன். இது வேறு யாருடைய குரலும் அல்ல கருணாநிதியின் குரல்தான்.
மத உணர்ச்சியை தூண்டி இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட முயலும் மதவாத சக்திகளை ஏற்கனவே கண்டித்திருக்கிறேன். ராஜாவுக்கு மிஞ்சிய ராஜ விசுவாசி போல செயல்படும் வீரமணியும் மாற்று அரசியல்பாதை தேட வேண்டாம்; மாற்றி கொள்ளாத அரசியல்பாதையை தேடுங்கள் என எனக்கு உபதேசம் செய்துள்ளார். இவர் எனக்கு பாடம் சொல்லித்தரத் தேவையில்லை, அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை. எங்கள் வழி தெளிவானது.
அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் நள்ளிரவில் வீடுபுகுந்து கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அ.இ.அ.தி.மு.க அணியில் இருந்த நான் ஓடோடி சென்று அவரை சந்தித்தேன். அப்போது வீரமணி யார் பக்கம் இருந்தார்.
எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக வீரமணி இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவரது ஆலேசானைகள் எங்களுக்குத் தேவையுமில்லை என்று வீரமணிக்கு கடிதம் எழுதியுள்ளேன். கருணாநிதிக்கும் நகல் அனுப்பியுள்ளேன்.