அண்மையில் அறிவிக்கப்பட்ட அரவாணிகள் நலவாரியத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தனி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, அதற்கு நான் பதிலளிக்கும் நாள் அன்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவைக்கு வந்து அவை முன்னவரையும், மற்றவர்களையும் தரக்குறைவான முறையில் விமர்சித்து, அவையிலே கலவரத்தை ஏற்படுத்துகின்ற வகையில் பேசி, அதற்கு என்ன பதில் வருகிறது என்பதைக் கூட கேட்காமல், எந்தவித காரணமும் இல்லாமல் வெளிநடப்பு செய்துவிட்டு சென்றார்.
இந்த பிரச்சனை காரணமாக அவையின் நேரம் மிகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டதால், என்னால் பதில் அளிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. எனவே உறுப்பினர்கள் பேசியதற்கு பதில் கூற நான் குறித்து வைத்திருந்தவற்றை அறிக்கைகளாக அளித்து வருகிறேன். வெள்ள நிவாரணம் பற்றி அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் பேசினார். அதற்கு பதிலை அவர் இருந்து கேட்கவில்லை. பொதுவாக தேசிய பேரிடர் அவசர உதவி நிதியிலிருந்து மத்திய அரசிலிருந்து பெறப்படும் தொகையை முதல் கட்டமாக செலவழிப்பதும், பின்னர் மத்திய அரசு நிதி உதவி பெற்றதும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதும் எல்லா ஆட்சியிலும் மேற்கொள்ளப்படும் நடைமுறையாகும்.
தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு நல வாரியங்கள் குறித்து பல உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அமைப்பு சாரா தொழிலாளர்கள் முதல் அரவாணிகள் நலவாரியம் வரை அமைக்கப்பட்டுள்ள நலவாரியங்களில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 19 மாதங்களில் ஒரு கோடியே 80 லட்சத்து 83 ஆயிரத்து 329 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 296 அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு மொத்தம் 163 கோடியே 86 லட்சத்து 31 ஆயிரத்து 581 ரூபாய் பல்வேறு இனங்களின் கீழ் உதவித் தொகைகளாக வழங்கப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட அரவாணிகள் நலவாரியத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தனி குடும்ப கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.